Sunday 1 November 2015

பெண்மையைப் போற்றுவோம்

ஆகஸ்ட் - 26
மகளிர் சமத்துவதினத்தையொட்டி எழுதப்பட்ட கட்டுரை
பெண்மையைப் போற்றுவோம்
பெண்:-
    பெண் என்பவள் தன்னை உருக்கி,சிறுமைப்படுத்தி, வலி ஏற்று, முற்றுமாய் தன் சார்ந்த  குடும்பத்தினை வளப்படுத்தத் தன்னுள் பெரும் தேய்தலை ஏற்றவளாகவே காணப்படுகிறாள். தன் சுக சந்தோஷங்களை அடக்கி, தன்னைச் சுற்றி இருப்போர் வாழ்ந்திருக்கவே விரும்புகிறாள்.
    வாழ்வின் வசந்தம் பெண், கடலின் உப்பெனவும், காற்றின் இசையெனவும் ஆனவள். குடும்பம் தழைக்க அன்பின் உரமிடுபவள் பெண்.
பெண்ணின் நிலை:-
    பெண்ணைத் தலையாய்க் கொண்ட நம் பண்பாடும், வழிபாடும் பெண்ணை எவ்வாறான நிலையினில் வைத்துள்ளன. 
    நமது இறையியல்துவம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது! சிவபெருமான் தனது இடப்பாகத்தில் உமையாளை சரிக்குச்சரியாக ஏற்றுள்ளார், செந்திருவைத் தன் நெஞ்சில் வைத்தவராகத் திருமாலும், கலைமகளைத் தன் நாவில் கொண்டோனாகப் பிரமனும் காணப்படுகின்றனர்.
    ஆண்டாள், காரைக்கால் அம்மையார் திலகவதியார், திருமங்கையாழ்வார் ஆண்டவனைக் கொண்டாடித் தொண்டு செய்திருந்து மகிழ்ந்தது போலவே இன்றும் தன்னை ஆண்டானுக்கும் சாhந்திருக்கும் குடும்பத்தார்க்கும் சேவை செய்வதாக, சீரான கருத்தால் சிநேகத்தின் செருக்கால் சிறந்தோங்குபவளாகப் பெண் இருக்கிறாள்.
உரிமைக்கான தேவை:
    ஒவ்வொரு துறைகளிலும் பெண்ணின் முன்னேற்றம், தொடுவானின் செந்தணலென மின்னும் போது, பெண்ணின் சமத்துவம் போற்றுவது அவசியமாகிறது. பெண்கள்மீதான வன்முறை நிகழ்வுகளை நிமிடக்கணக்கிலும், நொடிக்கணக்கிலும் புள்ளிவிவரங்கள் பட்டியலிடுகின்றன. உலகில் சரிபாதியாகப் பரவியிருக்கும் பெண்குலம் தனக்கான உரிமையை முன் வலியுறுத்தக் காரணம் என்ன, ஆழியாகப் பரந்தும், நீராவியாகச் சுருங்கியும்,பனியாக உருகியும் வார்க்கப்படும் பெண்ணை இயல்பு நிலையினின்று விலக்கி வைத்து, இழிவு பாராட்டும் போதே உரிமைக்கான அவசியம் ஏற்படுகிறது.
    போற்றுதலுக்கு உரியவள் பெண்,இந்த உலகிற்கான வாரிசுகளைப் படைப்பது முதல், உடல் ரீதியாகவும், சமுக பொருளாதார ரீரியாகவும்,மன அளவிலும் ஆணினின்று பெண் வேறுபட்டே காணப்படுகிறாள் சிந்தித்துச் செயலாற்றுதல், சகித்துப்பணியாற்றுதல், ஒருமுகப்படுத்தும் திறன் போன்றவற்றில் பெண்ணுக்குச் சிறப்பான இடமுண்டு. ஆண்மையப் பார்வையிலிருந்து விலகி, தனக்கான உலகைச் சுயபார்வையோடு அணுகும் பெண்கள், தங்களுக்கான சமத்துவத்தைப் புதிய தேடல்களோடு அமைத்துக் கொள்கிறார்கள்.
    வரலாற்றில், தனக்கெதிரான ஒரு சூழலில் தன்னை முன்னெடுத்துச் செல்வது, விடுதலையின் செயற்களமாகிறது, தாவரம் செழிக்க உதவும் நீரெனப் பாய்ந்து, வளமாக்கும் முடிவுகளால், சமத்துவத்தின் கரைதனில் பிரவேசிக்க இயன்றிருக்கிறது.

பெண்ணின் முகங்கள்:
    ஜான்சி ராணியிலிருந்து, இரோம் சர்மிளா வரையிலான பெண்களின் உரிமை மீட்கும் போர்கள் பெண்ணின் சமத்துவத்தைப் பகரும் சான்றுகளாக நம்முன் விரிந்து கிடக்கின்றன.
    சந்தா கோச்சர் ஐஊஐஊஐ வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆவார். ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் 25 ஆற்றல் மிக்க பெண்களில் ஒருவராகத் தேர்வானவர் 2010 இல் தனது வங்கி குறித்த சேவைகளுக்காக பத்ம பூஷண் விருதுபெற்ற சாதனையாளர்
    சாந்தி டிகா 35 வயதே நிரம்பிய இளம் தாய், இந்திய இராணுவத்தில் ஜவானாகப் பணி புரிந்தவர் இந்தியத் தாய்த்திரு நாட்டிற்காகத் தன் உயிரினையும் துறந்தவர்.
    காய்கறி விற்பனையாளரின் மகளாகப் பிறந்த ஆஷாராய், ஓட்டப் பந்தய வீராங்கனையாக தேசிய அளவில் சாதனை படைத்த பெருமைக்கு உரியவர்.
    விண்வெளிக்குப் பயணித்து உயிரீந்த இந்தியப்பெண் கல்பனா சாவ்லா, ளுடீஐ யின் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அருந்ததி போன்றோர் பெண்ணின் சமத்துவத்தை நினைவூட்டித் தங்களுக்கான உழைப்பின் துளிகளை இந்திய நதியோட்டத்தில் கலந்த பெருமைக்கு உரியோராவர்.
    துர்கா சக்தி, ஒன்றை மனுஷியாக உத்தரப்பிரதேச அரசை, லஞ்ச ஒழிப்;பிற்கான நடவடிக்கையில் எதிர் கொண்டவர். லஞ்சத்திற்கு எதிராகப்போராடிய இவருக்கு உத்தரப்பிரதேச அரசு பணி இடைநீக்கத்தை பரிசாகத் தந்தது பொதுமக்களும், ஊடகங்களும் இவருக்கு ஆதரவாகத் துணை நின்றன அனைத்துப் புறச்சூழ்நிலையின் தாக்கங்களின் பொருட்டு தனது வாழ்க்கையின் பிரதியினை, அதன் நோக்கத்தினை மாற்ற முயலவில்லை துர்கா சக்தி.
    2014 இன் சாதனைப் பெண்ணாக வணிகத்தில் சாதித்து வரும் பெப்சிகோ நிறுவனத்தின் முதன்மை அதிகாரி இந்திரா நூயி, குடும்பப் பொறுப்புகளோடு, சமூகத்தின் வணிக ஓட்டத்திலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டவர்.
இலட்சியம்:-
    தங்களது இலட்சியத்தில் சற்றும் தொய்வோ, சலிப்போ இன்றிச்செயல்படும் பெண்கள், முன்னேற்றத்துடிப்புடன் இயங்கும் பெண்கள், தேவையற்றுத்தடைகளை, சர்ச்சைகளை ஏற்க வேண்டியது, அவள் பெண் என்பதாலா எனச் சிந்திக்க வைக்கிறது, சமீபமாக நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று உலகச்சாதனை நிகழ்த்திய சானியா, இரட்டையருக்கான பிரிவில் முதல்நிலை வீராங்கணையாக உருவாகியிருக்கிறார்.  தன் சொந்த விருப்புகள், வீரர்கள் தெரிவு, உடை சார்ந்த எதிர்ப்புகள் துரத்தியபோதும், தன் நோக்கத்தை விடாமல் தொடர்ந்து டென்னிஸில் புதிய உச்சம் தொட்டிருக்கும் சானியா மிர்சா, முக்கியமான புரிதலைத் தன் வெற்றியின் வழியே முன் வைக்கிறார்.
மணமான பெண்களின் உழைப்பைக்குறித்த மனோபாவம் எல்லா இடங்களிலும் ஒன்று போலவே உள்ளது.  பெரும்பான்மையாக திருமணமான பெண்களை பணிக்கு வைத்துகொள்வது தவிர்க்கப்பட்டே வருகிறது.
    பெண்கள் பல்துறை சார்ந்தும், சமூக அக்கறையோடும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.  சமத்துவம் பேசும் இக்காலகட்டத்தில்; தான் தாய்ப்பால் புகட்டுவது குறித்த பேச்சுக்களையே ஐ.நா அறிவிக்கிறது என்பது எதைச்சுட்டுகிறது.
பெண்ணும் குடும்பமும்:-
    பெண் குடும்பம், சமூகம், பணி என்று இயங்கினாலும், அவள் தன் மீதான வன்முறையை எதிர் கொண்டபடியிருக்கிறாள் என்பதும் ஏற்க வேண்டிய உண்மை.  பெண்ணுரிமை என்பதே ஆணுக்கு எதிரானது என்ற கருத்தாக்கம் உடைபடுகையில், மனித உரிமைக்கான புதிய பார்வையை பெண்ணுக்கான புதிய கோணம் பிரதிபலிக்கும்.
    ஒவ்வொரு கொண்டாட்டமான சூழலும், அதற்கு எதிரான ஒடுக்கப்படும் குரலும் இயல்பானதென்றாலும், ஒடுக்கப்படும் பிரதியைக் குறைத்து மதிப்பிட இயலாது, அதற்கான புதிய திறப்புகளை ஏற்படுத்தி சமத்துவத்தை பிரகாசிப்பிக்க வேண்டியது இன்றைய தேவை.
    பல்துறையில் பெண்கள் தங்கள் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வண்ணம் உள்ளனர்.  வீட்டில் இருந்தபடியேயும் அவர்களுக்கான உலகைப் படைத்தும், அதன் வழியாக தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஒவ்வொரு தாயும் பெண் சமத்துவத்தின் ஓட்டத்தில் தங்களை இணைக்கத்துடிக்கும் பெரு நதிகளே.  ஒட்டத்தைச் சீர்படுத்தும் நாளில் பிரவாகித்து ஓடும் சமத்துவ நதி.
    கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், போன்றவற்றோடு, இயைந்து, குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான ஒடுக்குதல்களிலிருந்தும் பெண்ணைக் காக்க வேண்டியது இன்றைய சூழலின் தேவையாகும்.


                            அ. ரோஸ்லின்
                        ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி,
                            தா. வாடிப்பட்டி


No comments:

Post a Comment