Sunday 1 November 2015

கவிதைகள்

1.    தந்திரமற்ற எனது அன்பை
இரவிற்கு பரிசளித்தேன்,
சிறகுகள் பூட்டிப்பறக்கிறது
இரவுப்பறவை.

2.    உன்னை வசீகரப்படுத்தாத
வார்த்தைகளைத் தவிர்த்தே
கணங்களைக் கடக்கிறேன்,
வலியினை ஒளித்துப்
பரவியிருக்கும் நீர்ப்பரப்பென.
   
3.    குழந்தைகளற்ற பிரதேசத்தின்
பொம்மைகள்
சதா நித்திரையில் கிடப்பதைப்போல
சம்பாஷணையற்ற மனதும்.

மைஃபேவரிட்

பள்ளிக்குக் கொடுத்துவிடும் காய்கறி எதையும்
சாப்பிடுவதில்லை கவின்;
வழமை போல் இன்றும் அப்படியே,

கேரட் ஏன் சாப்பிடல,
கசப்பா .இருந்துச்சா என
கடுமையுடன் கேட்டது தான்,
இருநாட்களாக ஒரு பகிர்தலுமின்றி
மூழ்கிய கல்லென உலாவினான் ;
தொடர்ந்த தினங்களில்,

உடைகளைத்துவைக்கையில்,
அவனது நைட் பேன்டிலிருந்து
தலை நீட்டுகிறது,
நான்காய் மடிக்கப்பட்ட காகிதம்;
மைஃபேவரிட் எனும் தலைப்பினில்.

மைஃபேவரிட் சப்ஜெக்ட் சயின்ஸ்,
மைஃபேவரிட் டீச்சர் சின்னா சார்,
மைஃபேவரிட் ஃபிரண்ட் ரவி,
மைஃபேவரிட் ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி
மைஃபேவரிட் வெஜிடபிள் கேரட்


                அ.ரோஸ்லின்

இந்தப் பருவத்தின் கடைசி நதி

பதற்றத்துடன்
தேர்வெழுதத் துவங்தும் சிறுமியின்
கூந்தல் மலர்,
மெல்லப் பழுப்பிற்கு மாறத்துவங்கியிருந்தது.

வினாக்களை,
நிலம் மேல் படர்ந்த நீரென
உட்கொண்டு,
தன் பள்ளி நாட்களின் ஓவியத்தை
முழுமைபடுத்த முயல்கிறாள்,

தன் நிலத்தின் மகரந்தத்தை
உயிர்ப்பின் பெரும் நேசத்தோடும்
பதில்களென பதினிடுகிறாள்,

ஓர் ஆகாயமென விரிந்து கிடக்கும்
வாழ்வின் பக்கங்கள் சிலவற்றை
எழுதி முடிக்கும் திண்மை
அவள் வெண்ணிறத் தாள்களை
பசுமையாக்குகிறது.

இது அவளுக்கு
இந்தப் பருவத்தின் கடைசி நதி.
       

                அ.ரோஸ்லின்

கனவென வளரும் பிரிவு

இந்த நாளின் பதற்றம்
உன்னையும் என்னையும்
இந்த நாளிலிருந்து விலக்கியிருக்கிறது.
உன் அன்பின் தீப்பற்றலில்
கனவென
வளர்ந்து வருகிறது
பிரிவு.

உன் அன்பற்ற உலகை
எதிர்கொள்ள இயலாமல்,
கிள்ளையின் புலம்பலுதிர்த்து,
இரட்சிக்க ஒண்ணாத
பெருங்காட்டினுள் கிடக்கிறேன்;

பசிய இலைகளாக,
வாட்டம் மிகுந்த மலர்களாக,
உன் சிநேகம் உறிஞ்சிய நிலமாக,
மெல்லிய சிறகடிப்போடு
பறவைகள்,
தங்கள் இருப்பிடம் தேடி
வரத்துவங்குகின்றன.


                அ.ரோஸ்லின்

மழைத்தீற்றல்

1.    ஒவ்வொரு மழைப்பொழுதும்
புத்தம் புதியதாகவே இருக்கிறது,
தினம் பகிர்ந்தும் நீர்த்துப்போகாத
குழந்தையின் முத்தம் போல.

2.    மழைபொழியும்
காலை நேர ஆகாயம்
ஒரு அன்பை நினைவூட்டுகிறது
குழந்தையெனக் கண்சிமிட்டும்
காலையில் சிவந்த வெளிச்சம்
உன் கரத்தினால் உண்டானது.

3.    ஒவ்வொரு மழையும்
ஏதாவது ஒன்றைப்
பரிசளித்துச் செல்கிறது,
முதலில் கொஞ்சம் பிரியம்,
கொஞ்சம் பிரமிப்பினைப்பூசிச்செல்கிறது,
நம் வாசல்களில்,
இறுதியாய்த் தீட்டுகிறது
சிறிது பிரிவின் நிறத்தையும்

No comments:

Post a Comment