Sunday 1 November 2015

அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்


தமிழில் முதுகலை முடித்து மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் அ. ரோஸ்லின். ‘ அழுகிய
முதல் துளி ‘ பெண் எனும் மழை ‘ , ‘ மஞ்சள் முத்தம் ‘ என மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். செறிவான நடை கொண்ட
கவி மொழிக்குச் சொந்தக்காரர். புதிய புதிய சொற்சேர்க்கையால் சுய நடை இவர் கவிதைகளில் முன்நிற்கும் நல்லியல்பாக உள்ளது.
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ மஞ்சள் முத்தம் ‘ ! அழகாகத் தொடங்கி அழகாக முடியும் எளிய , காதல் படிமத் தொடர் கவிதையிது !
மஞ்சள் கொன்றை
மலர்களால் நிரம்பியிருக்கிறது
சாலை
அங்கு நீ தந்த
ஒரு முத்தத்தில்
ஒரு மஞ்சள் பூவென
சுருங்கிவிட்டது பூமி
…… என்று கவிதை தொடங்குகிறது. ‘ பூமி சுருங்கிவிட்டது ‘ என்ற வெளிப்பாடு கவித்துவம் மிக்கது.
என் பிரியத்தின் குகைக்குள்
ஒரு பறவையெனப் பற்றியிருக்க
விரும்புவதாகக் கூறினாய்
…… முதல் வரியில் புதிய உவமை நயமானது.
இக் கணத்தில் நான்
ஸ்பரிசித்திருந்தேன்
உன் சிறகின் சிலாகிப்பை
…….. ‘ சிறகின் சிலாகிப்பு ‘ என்ற சொற்கள் நம் முன் பரப்பும் அர்த்த வெளியில் தொனிப்பொருள் செறிவு , மொழி சார்ந்த அழகை வாசகன்
மனத்தில் விட்டுச் செல்கின்றன.
சிறிதும் மறுக்கவியலா
உன் பேரன்பு
என்னுள் பரவசத்தைத் தெளித்தபடி
கடந்து செல்கிறது
இனியெப்போதும்
திரும்பப் போவதில்லை நான்
என் கைவிடப்பட்ட கூட்டிற்கு
……. முத்தாய்ப்பு பொருத்தமாக உள்ளது. கடைசி வரியில் சொல்லாமல் சொல்லப்பட்ட பறவைப் பிம்பம் தன் இயல்பேயான பறத்தலைக்
காதல் சிலிர்ப்பாக மாற்றிக் குறியீடாக நிற்கிறது. ‘ பரவசத்தைத் தெளித்தல் ‘ என்பது வாசகனைப் பரவசப்படுத்தவே செய்கிறது.
‘ நனையும் பூகோளம் ‘ ஒரு வித்தியாசமான கருப்பொருள் கொண்டது. தாய்க்குத் தொற்றுக் காய்ச்சல். குழந்தை கவின் அம்மாவோடு
விளையாட அருகில் வருகிறான். தாய் தடுக்கிறாள். கவின் வருத்தத்துடன் தூங்கப்போய்விடுகிறான்.
கிட்ட வந்து ஒட்டி விளையாடிய கவின் பயலை
விரட்டியபடி இருந்தேன்
…….. என்று கவிதை தொடங்குகிறது. குழந்தையைத் தூங்கப் போகச் சொல்கிறாள் அம்மா. அவன் போகிறான். எப்படி ?
பதிலேதும் அளிக்காமல் கவிழ்ந்த மலரென விலகிச் சென்றான்
……. என்கிறார் ரோஸ்லின். குழந்தையின் பாசச் சொற்களை ‘ ஈர மொழி ‘ என்கிறார்.
இரவின் நிசப்தம் கலைக்கும் அவனது சொற்துளியில்
வெளியில் நனைந்து கொண்டிருக்கிறது பூகோளம்
…….. என்று கவிதை முடிகிறது. சாதாரணமான ஒரு நடைமுறைச் சம்பவம் எளிய சொல்லாட்சியில் கவிதையாக உருவெடுத்துள்ளது.
‘ பரிச்சயமான வெளி ‘ என்ற கவிதை , கவிதைத் தாக்கம் பற்றிப் பேசுகிறது. பாலை அடிப்பிடிக்கச் செய்ய , காலம் பிறழ்ந்து தூங்க ,
சுற்றம் மறந்து கதைக்க , அலுவல்களைத் தள்ளிப் போட , கேசம் நரைப்பதை பூதாகரப்படுத்த , திட்டமிட்ட விளம்பரத்தை எதிர் பார்க்க ,
உரையாடல்களைத் திறக்க என ஒரு பட்டியல் காணப்படுகிறது.
கவிதையின் கடைசி வரி……
கவிதை
எவருமற்ற தனிமைக்குள் தள்ளிச் செல்கிறது.
……. தணியாத கவிதையார்வம் நமக்குள் ஓர் உலகத்தை உருவாக்கத்தான் செய்கிறது. அந்த உலகத்தின் ஒற்றைப் பிரஜையாகக் கவிஞன்
சர்வ சுதந்திரத்துடன் பயணிக்கிறான்.
‘ ஆயுதம் சூடிய சொல் ‘ என்ற கவிதை , ஒரு காதல் சிறுகதையின் சாரத்தைத் தரித்து நிற்கிறது. இக்கவிதை இரண்டு இடங்களில்
தொனிப் பொருள் கொண்டது.
முக மூடியணிந்து
வேடிக்கை காணத் துவங்கின
நான் பகிர்ந்த சொற்கள்
…….. அந்த முகமூடி நீங்கினால் என்ன நிகழும் எனக்கேட்டால் , அதற்குப் பதில் சொல்கிறது முத்தாய்ப்பு !
ஆயுதம் தரித்து வீழ்ந்த
சொல் ஒன்று
உயரே உயரே எழுகிறது
மாமிச வாசத்தோடு
…….. இந்த முத்தாய்ப்பின் தொனிப் பொருளை விளக்கினால் சிறப்பாகாது. தொனிப் பொருள் குறிக்கும் யூகம் நல்ல கவித்துவம் கொண்டது.
கவிதையில் ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கட்டமைத்தல் ஒரு உத்தியாகும். மனுஷ்யபுத்திரன் கவிதைகளில்
இப்பாணியைக் காணலாம். அதே உத்தியில் அமைந்துள்ளது ‘ எச்சம் ‘ கவிதை ! ‘ அன்பு ‘ என்ற சொல் பத்திகள் தோறும் விரவிக் கிடக்கிறது.
‘ நீ எனும் நீரூற்று ‘ — காதல் கவிதை ! படிமத்தில் தொடங்கிப் படிமத்தில் முடிகிறது.
உன் சொல்லின் ஆழத்தில்
புதைகிறேன்
என் மௌனம் கலைத்தபடி
காதலின் பல வாயில்களைக் காட்டுகிறது. கவிதை !
நெருங்கிய உறவின் சிலிர்ப்பை
உனக்குள் கண்டெடுக்கிறேன்
நானுமொரு கடலாகி
கடல் என்ற படிமம் மன நெகிழ்வை — சாதகமான ஒரு வெளியை உருவாக்குகிறது.
என் கண்களின்
அடர் வனத்தில்
உன் பார்வையின் நீரூற்றைக்
காண்கிறேன்
‘ நீரூற்று ‘ மன நிறைவிற்குக் குறியீடாக அமைந்துள்ளது. மனச் சுவர்களெங்கும் இனிமை பூசப்படுகிறது.
சில நினைவுகளின்
நெருக்கடியில்
இரவை
விரும்பாமலே
விடுவித்து விடுகின்றன
பகல் பொழுதுகள்
……. சிறிய , எளிய , இனிய கவிதையிது !
‘ நதியில் மூழ்கும் சமுத்திரம் ‘ கவிதை கூட காதலைத்தான் பேசுகிறது.
நீர் மூழ்கிக் கப்பல் விட்டுச் சென்ற
தடயங்களுடன் கிடக்கிறது
என் சமுத்திரம்
‘ நதி ‘ ஆணுக்கும் , ‘ சமுத்திரம் ‘ பெண்ணுக்கும் குறியீடுகளாக அமைந்துள்ளன. இவர் கவிதைகளில் படிமத்திற்குப் பஞ்சமில்லை !
‘ கயிற்றிலிருந்து விழுந்தவன் ‘ என்ற கவிதையில் சில இடங்கள் புரிகின்றன ; சில புரியவில்லை ! தொன்மத்தைப் பின்புலமாகக்
கொண்ட புனைவுக் கவிதையிது !
பிரபஞ்ச உருண்டைக்குள்
சிக்கிக் கிடக்கிறாள் மீனாட்சி

புவி நடுங்கத்துவங்குகிறது
வெளிவரத் துடிக்கும்
அவள் முயற்சிகளில்

ஆதி வனப்பின்
ஜீவன் மீட்கும் வாசம்
மயான வெளி மீறித் தெறிக்கிறது

……. மேற்கண்ட பத்திக்கு எனக்குப் பொருள் விளங்கவில்லை.
கிளியைக் காணாது பதறும் மீனாட்சி
மெய் திமிற இரைந்து துடிக்கையில்
உள் புகைச்சல் புகைச்சல் மறைந்த
முறுவலிப்பில் விஷத்தை
அமிழ்தமெனக் குடித்து
வீழ்ந்து கிடந்தான் சொக்கன்
……. சொக்கனும் மீனாட்சியும் இறை நிலையிலிருந்து மனித நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கிளி வேதத்தின் வடிவம் என்பது இந்திய
ஆன்மிகம் சார்ந்த பார்வையாகும். இக்கவிதையின் உள்நோக்கம் தெரியவில்லை.
புவியை மெல்ல
விழுங்குகிறாள் மீனாட்சி
…….. என்பது முத்தாய்ப்பு. மிகையுணர்வு சார்ந்த புனைவு ! இக்கவிதக்கு ‘ கயிற்றிலிருந்து விழுந்தவன் ‘ என்ற தலைப்பு எப்படிப்
பொருந்துகிறது என்பது கேள்வியாக நிற்கிறது.
‘ உன்னிலிருந்து விடுபடாத சூடு ‘ என்ற கவிதையில் அசாதாரணமான படிமம் ஒன்று அமைந்துள்ளது.

உன் கரத்தின்
இளம் சூட்டைப்
பதற்றத்துடன் உணர்கையில்
எனது அறையின் கதவுகள்
இறக்கைகளாக
உருமாறத் துவங்குகின்றன
உவமைத் தாக்கம் அதிகம் கொண்ட ரோஸ்லின் மொழிநடையில் , ‘ சந்திப்பின் வெப்பம் ‘ என்ற கவிதையிலிருந்து ஒரு படிமம் :
தினமும்
ஒரு பூ உதிர்வது போல
ஒவ்வொரு பொழுதும் உதிர்கிறது
நிறைவாக , ‘ மஞ்சள் முத்தம் ‘ தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. அழகிய தமிழ் மொழியின் பரப்பில் இவர் இன்னும்
நமக்குத் தர பல கவிதைகளை இனம் காண்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு


நன்ற்: www.thinnai.com

No comments:

Post a Comment