Sunday 1 November 2015

அழுகிய முதல் துளி -அ.ரோஸ்லின் -ஒரு வாசகப் பார்வை




    ஆதியில் இருந்தே நதிகளின் வெள்ளப் பெருக்கு மற்றும் அணை குறித்த தொன்மக் கதைகளும் நம்பிக்கைகளும் கற்பிக்கப் பெற்றே வந்திருக்கிறோம் நாம். பாகீரதனின் தவத்திற்கு இணங்கி பூமி வந்த கங்கை பாகீரதி என்று அழைக்கப் பட்டாள் என்னும் புனைவில் இருந்து
துவங்குகிறது பாரதத்தின் இதிகாசம் சார்ந்த கதையாடல் ஒன்று.துவக்க நாட்களில் உருவான ஊழி மற்றும் வெள்ளம் குறித்த தொல் புனைவுகள் உதிரப் போக்கு நிகழும் பெண்ணுடலில் இருந்தே பிறந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாய் நம்ப விழையலாம்.வெள்ளம் மற்றும் ஊழி குறித்த தொல் நம்பிக்கைகள் கிரேக்க மற்றும் ஹீப்ரூக்களின் இதிகாசங்களில் இருப்பதைக் காட்டிலும் பாபிலோனியர்களின் ஆதிக் காவியங்களில் பூமியின் படைத்தல் சார்ந்த குறிப்புகளில் அழுத்தமாய் பதிவு செய்யப் பெற்றிருக்கிறது .

      பாபிலோனிய காவியத்தில் தியாமட் என்பவள் அண்டம் முழுவதிற்குமான தாய் .அவளே தீதின் சின்னமுமாயும் இருக்கிறாள்.
அவள் உலகின் மீது ஏவ சில கொடூர விலங்குகளை படைத்தாள் ,அவற்றின் உதிரம் எல்லாம் விஷமாய் இருந்தது.அவளது மகன் மார்டக்கால்  அவள் தோற்கடிக்கப் படுகிறாள்.மார்டக் தன் தாயின் உடலைக் கீறி அவள் உடலில் இருந்து உதிரம் மொத்தமும் வடியும்படி செய்கிறான்,மேலும் திசைகளின் காற்றுகளுக்கு ஆணையிட்டு உதிரத்தை ரகசிய இடங்களில் பதுக்க வைக்கிறான்.பின்னர் அவளுடலை இரண்டாய் பிளந்து ஒரு பாதியை ஆகாயத்தில் பூமியில் வெள்ளம் வரா வண்ணம் பொருத்தி வைத்து பிறிதொரு பாதியை பூமியோடும் பிணைக்கிறான்.மார்டக் ஆணையிடும் அதிகாரம் ஆதலால் அவன் தீதை ஒழித்து நன்னெறி நிலைநாட்டியபின்பே நல்லாட்சி செலுத்த முடியும் என முடிகிறது இக்காதை. இங்கே புழங்கும் தீமை,வெள்ளம்,குருதி போன்றவற்றை ஒழித்தல் சார்ந்த புனைவுகள் அவன் அதிகாரத்தை கைப்பற்றவும் ஆளவும் ஆண் பெண்ணை அடக்கி அவள் உடலை பிளந்து பிரித்து வைத்தாக வேண்டுமென்பதாய் இருக்கிறது.ஏனெனில் அவனது அழிவு பெண்ணின் ரகசிய திரவத்தில் பதுக்கி வைக்கப் பெற்றிருக்கிறது எப்போதும்.

பெரிதும் வரலாற்றின் பக்கங்களில் உதிரபோக்கின் சுழற்சி குறித்த படிமங்கள் பன்முகப் பட்டவை. டாலியின் பிம்பங்கள் நிலா,சிவப்பு நிறம், திரவ ஒழுக்கு என்பதாகவும் எமிலி டிக்கின்சனின் அவசம் நிரம்பிய குரலில் எரிமலை,விருந்தினர் வரவு,கடிகாரம்,சேறு,உயரத்திலிருந்து வீழ்தல்,அலைகளின் லயமுள்ள ஒழுக்கு,நோய்மை,வெளியேற்றம் என்பதாய் இருக்கிறது.சில்வியா ப்ளாத் இக்கனிகள் பழுத்து / உதிரக்கசிவு கொள்வன /இந்த வெள்ளைவயிறு இன்னும் கூட கனியக் கூடும். என்றெழுதுகிறார்

தமிழில்


எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை

–கருவறை வாசனை- 1995 - கனிமொழி

இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு
தூம கிரகணம்
நிலவைக் கவ்விய யோனியின் வாதை
செந்நதியெனப் பாய்கிறது

சாண்டையின் கட்டற்ற போக்கு
வரைபடத்தின் ரேகைகளை
மாற்றி எழுதிப் பார்க்கிறது              
தோன்றும் புதிய பரப்புகளில்
சூறைத் தீ பற்றுகிறது

-லீனா மணிமேகலை

மேற்கண்ட இரண்டு கவிஞர்கள் தம் கவிதைகள் உருவாக்க விழைந்த பதிவுகளின் இணைச்சிந்தனையாக உயிர் எழுத்து பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் அ.ரோஸ்லினின் அழுகிய முதல் துளி என்று பெயர் சூட்டப்பட்ட இத்தொகுப்பின் தலைப்புக் கவிதையை வாசித்துப் பார்க்கலாம்

அழுகிய முதல் துளி  

குப்பை மேட்டைக் கிளறிக் கொண்டிருக்கிறாள்
காயத்திரி
துருவேறிய ஆணிகள்
கரடு முரடான கண்ணாடிகள்
புளித்த காற்றினில் பரவிக் கிடக்கும்
நோயின் வாசனை அமிழ்ந்த
கருநிறக் கழிவுக்குள் இருந்து
அவள் ஆதிப் பயணத்தின்
அழுகிய முதல் துளி

-          ரோஸ்லின்

சமயம்,வரலாற்றிலிருந்து துண்டித்தல்/எல்லைகளை சிதைத்தல் மற்றும் கழிவிரக்கம் என்பதாய் மேற்கண்ட கவிதைகளின் அறைகூவல்களை
பகுப்பது எளிதாகிறது.

மனித நாகரீகம் வளர்ச்சியுறாத முன் தோன்றிய மூத்த குடிகளின் நாட்களில் மனிதன் மற்ற எல்லா விலங்குகளைப் போலவே விடாய் உதிரத்தின் வாசனைகளால் உந்தப்பட்டு உடலிச்சை கொள்பவனாய் இருந்திருக்கிறான் பின்னர் விழிப்பெய்தி நாகரீகம் வளர்ச்சியுற்றதும் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டான் என சிக்மண்ட் ப்ராய்ட் தனது கன்னிமையின் மீதான கற்பிதங்கள் (டாபூஸ் ஆப் விர்ஜினிட்டி )என்னும் கட்டுரையில் பதிவு செய்கிறார்.மேற்கண்ட கவிதைகளில் கவிஞர்கள் மீளுருவாக்கம் மற்றும் சுயமெய்துதல் மீதான தம் தெரிவுகளை சொற்படுத்தியிருக்கும் விதத்தை ப்ராய்டின் அறிதல் நியாயம் செய்வதை உணர முடியும்   

ரோஸ்லின் தன் தொகுப்பு முழுதும் மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதமாய் வெவ்வேறு கவிதைகளில் உதிரத்தை தெறித்தெழுதுகிறார்.
வெட்டுண்ட சந்ததி என்னும் கவிதையில் … அந்தியில் கூடடையும் பறவைக் கூட்டத்தில் /செவ்விய வர்ணம் தீண்டிய கிளை முறிந்த அடிமரங்களின் சப்தத்தை உணர்ந்திருக்கிறாயா,/அதன் பனித்த அதரங்களில் இருந்து வழியும் /வெட்டுண்ட சந்ததியின் /இரத்தத்தீற்றல்களை....என்றெழுதுகிறார்

அற்பத்தின் ஒழுங்கு என்னும் கவிதையில் புணர்வின் தர்க்கத்தில் அறுந்து சிவக்கிறது வெண் தாமரை.வீணையின் இசை லயத்தில் தனை மறந்து இசைக்கிறாள் குருதி படிய என்றும்

மற்றுமோர் கவிதையில் பருகுகிறேன் கழிவுக் குருதியினை/உறைந்து உறுத்தும் செங்கழிவை என்றெழுதிப் பார்க்கிறார்

இரத்தத்தின் ஓசை என்னும் கவிதையில் வேதனைகள் திளைத்தெழும்பும் அத்தினங்களில் இலர்ந்த முட்செடியின் பலத்துடன் வெளியெங்கும் பாய்ந்தோடிக் குருதிக் குளமாக்குகிறது யோனிகளில் இருந்து வெளிப்படும் பிரயாசத்தின் இரத்தம் எனவும்

வெளிச்சமற்ற இருண்மை தரையில் சிதறிக் கிடக்கிறது உன் சொற்களால் நெருக்கப்பட்ட மலரின் ஒரு துளி இரத்தம் – உன் வாசனை என்னும் கவிதையில்

பிளவுண்ட அகழி என்னும் கவிதை மூழ்கிக் கிடக்கட்டும் இரத்த ஆற்றினில் என முடிகிறது

பச்சை இரத்தம் கொண்டு எழுதப் படுகிறது அதன் பால்யத்தின் வேதனை – ஒரு மரம் கிளை விரிக்கின்றது

பிரபஞ்சத்தின் துளிகள் கவிதையில் கருமுட்டைகளோடு அடிபட்டு அடங்கும் சர்ப்பத்தின் கருப்பையாய் கசிகிறது

காத்திருப்பின் இறுதிச் சொட்டு என்னும் கவிதையில் காத்திருப்பில் இறுதிச் சொட்டு இரத்தத்தையும் இழக்கிறது கனவு

உதிரத்தையே உணவாக்கும் வேடன் என வளர்ந்து ……தெறித்து விழும் உன் வார்த்தைகளை கழுவிப் போகும் பிள்ளைப் பேற்றின் இரத்தம் என பேரோலத்துடன் முடிகிறது

நாள் தவறும் மாத விடாய்ச் சுற்றும் வாரங்களுக்கு நீளும் உதிரப் போக்கின் வாதை என்பதெல்லாம் கடந்து ஆணின் புணர்ச்சிஅதிகாரத்திற்கு எதிரான தன் விடுதலைப் பேசும் குரலை பதிவு செய்கின்றன இவ்வரிகள் என நிறுவிப் பார்க்கலாம்

எழுத்தாளர் லாரன்ஸ் சாண்டர்ஸின் மூன்றாம் பெரும் பாவம் என்னும் நாவலின் நாயகி அறிமுகமாகும் காட்சியில் அட்ரீனலின் சுரப்பிகள் பொய்த்த தேகத்துடன் தொடர்ச்சியான உதிரப் போக்குடன் இருக்கும் ஜோ கோஹ்லர் ”முணுமுணுக்கும் சொற்களுடன் தன் கெட்டித்த உதிரம் வெளியேறுவதை ரசித்துக் கொண்டிருந்தாள் “ என்றெழுதுவதை ஆசிரியரின் மனவோட்டத்துடன் பொருத்திப் பார்த்துக் கொள்கிறோம்  

    
தவிரவும் ரோஸ்லின் ஓயாமல் துரத்தும் இப்பிரபஞ்சத்தின் வேதனைகளோடும் உடலியல் வேட்கை மற்றும் நிராகரிப்புகளோடும் தனக்கான இருப்பை /எதிர்ப்பை அடையாளப் படுத்த விழையும் ,போராட எத்தனிக்காத வார்த்தைகளுடன் மீதக் கவிதைகளை எழுதியிருக்கிறார் சொல்லி இருப்பதைப் போலவே …

பாலியல் உளவியல் பிரதானமாய் இருக்கும் கவிதைகளில் ஒரு வித கற்பிக்கப் பட்ட ஒழுக்கவியல் சார்ந்த கண்காணிப்பு –ஒடுக்குதல் – தண்டனை மற்றும் சமூக அறவியல் மீதான ஒவ்வாமையை குறைந்த பட்ச கவித்துவ எத்தனிப்புகளுடன் எழுப்ப விழைகின்றன.. தன் சுய அவசங்களை பொதுக்குரலாய் மாற்றும் கவிதைச்செயல் கவிதைக்கும் கவிஞருக்குமான கண்பொத்தி விளையாட்டாகிறது வித்தைக்கு பழக்குவதான வனவிலங்கின் திமிறல்களுடன்…

சமத்துவமற்ற அன்பு /இயைதலுடன் புரிதல் மீதான யாசிப்பு எதிர்கொள்ளும் வன்முறை /அச்சுறுத்தல் மறுதலிக்கப்படும் புலனின்பங்கள் மற்றும் காத்திருப்பு குறித்த கடந்த பதினைந்து ஆண்டு கால பெண்மொழியின் ஒரு பகுதியாக நீட்சி கொள்ளத் தக்க சிறந்த கவிதைகள் இந்தத் தொகுப்பில் நிரம்பி இருக்கின்றன.

ஆனால் ஒவ்வொரு சமூகத்தின் பாலியல் நடத்தையும் அது சார்ந்து எழும் புனைவுகளும் ஊடக வளர்ச்சி /தொடர்பாடல் சாத்தியங்கள் /சந்தை திறப்பு/புதிய சட்டங்கள் மற்றும் அனுமதிக்கப் பட்ட பிறழ்வுகள் ஒற்றி உருவாக்கம் கொள்கின்றன.இணை முழுமையற்ற ஆண் பெண் உறவு நிலைகள் எய்தி இருக்கும் படிநிலைகள் எப்போதும் புதிர்தன்மையும் சுவாரஸ்யமும் குன்றாதவை .உடலை மறுத்து பிம்பங்களை துய்க்கும் சமூக ஊடகத்தின் வளர்சிதை மாற்றங்கள் சகலத்தையும் பொதுவில் வைக்கும் மனோபாவம் போன்றவற்றை பாலரசியல் சார்ந்த கலையை த் தழுவிப் பேசுகையில் கவனத்தில் கொண்டாக வேண்டி இருக்கிறது

மேலும் பெண் எழுத்து மற்றும் வெளிப்பாடுகள் இன்று உலகக் கலைவெளியில் அடைந்திருக்கும் மாற்றங்கள் மற்றும் விரிந்திருக்கும் பரப்பு
பிரதானமான கவனத்தைக் கோருகிறது.இன்றைய சிறுமிகளின் பெண்குறிகளில் இருந்து உணர்வுத்தளங்கள் மற்றும் நாளங்களை நீக்கும் கந்து அறுப்பு  (பிமேல் ஜெனிட்டல் மிடிலேசன்) ,பெண் தற்பால் புணர்வாளர்களுக்கு வழங்கப்- பெறும் குரூர தண்டனைகள் மற்றும் அங்கீகாரங்கள்,பால் மாற்றம் மற்றும் பால் மறுப்பு அரசியல்…. போன்றவற்றை குறித்த விழிப்பு உலகமயமாக்கப்பட்ட போலிச் சமவெளி உயிரிகளான நமக்கும் அவசியமானவை என்பதை கவனப் படுத்த விழைகிறேன்

உங்கள் கவிதையின் வரிகளுக்கிடையே வெடிகுண்டொன்றை வையுங்கள் சுக்கு நூறாய் வெடித்துத் தெரிக்கட்டும்.பின்னர் மேலும் மெய்மை கூடியதொரு கவிதையை எழுப்ப விழையுங்கள்.தனக்குத் தேவையான அனைத்து உயிர்மங்களையும் தன் இடிபாடுகளிலிருந்தே எடுத்துக் கொள்ளும் – கார்லோஸ் காஸெரெங்-ன் வரிகளைச் சொல்லி இந்த வாசகப் பார்வையை நிறைவு செய்கிறேன் . 

(மதுரையில் புனைவு விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

No comments:

Post a Comment