Sunday 1 November 2015

அமைதி என்னும் கலங்கரைவிளக்கம்



­அமைதி என்னும் கலங்கரைவிளக்கம்

(செப்டம்பர் 21 உலக அமைதி தினத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை)



அமைதி என்பது எதுவாக இருக்கிறது. எங்கு இருக்கிறது எனயோசித்துத் தயங்குகையில் கண்ணில் மின்னி மறையும் ஜிவனுள்ள ஓர் ஒளியாக இவ்வுலகில், அமைதி வியாபித்திருக்கிறது.

இந்த உலகம் தன் அமைதியை இலைகளாக உதிர்க்கத் துவங்கியிருக்கிறது. அமைதிக்கான தளிரைக் காத்து, நம் சந்ததியினர்க்கு அளிப்பது நம் தலையாய பணியாகும்.

அமைதி என்பது பகைமையை வேரறுத்தல் எனவும், நாம் வாழும் சூழலில் ஆரோக்கியமான நடத்தை மாற்றங்களை உறவுகளை வலுப்படுத்தும் திறன்மிக்கதாகவும் உள்ளது.

அமைதிக்கான இடம்:

அமைதியும் அதற்கான இடமும் இன்று நாம் வாழும் உலகில் மிகத்தேவை. நாம் சார்ந்திருக்கும், நம்மைச் சுற்றியிருக்கும் நாடுகள் தங்களுக்குள்ளும் பிற நாடுகளுடனும் போரில் ஈடுபடுகின்றன.

இவ்வுலகம் அமைதியிழந்து தவிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் பொறுப்பேற்கின்றன. ஒவ்வொரு வளர்ந்த நாடும் இவ்வுலகை வழிநடத்த அதன் முன்னேற்றத்தில் பங்கு கொள்ள முயலுவதில்லை. சுயம் சார்ந்த வெளிப்பாடுகள் நிறைந்த உலகினைக் கட்டமைக்கவே அவை விரும்புகின்றன.

அமைதி என்பது முக்கியமான ஒன்றென இன்று ஆகி வந்திருக்கின்றது. நமக்குப்போர்களற்ற உலகும் நம் தலைமுறையின் ஆகச்சிறந்த நிலமும் நமது தேவை. இவ்வுலகின் களிப்பினை, பெரு மகிழ்வைக் கொண்டாட அமைதியே வாயில்.




உலக அமைதி தின வரலாறு:

உலக அமைதி நாள் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பிரகடனத்தின் படி அனைத்து உறுப்பு நாடுகளிலும் செப்டம்பர் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினமானது 1981இல் இருந்து நினைவு கூரப்பட்டு வந்தாலும் 2002ஆம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுவது சிறப்பு.

மக்கள் ஒன்றிணைந்து ஓர் சமூகமாகத் தன்மானத்தோடும் உரிமைகளோடும் வாழும் தேவையைப் பிரதிபலிப்பதாக அமைதி தினம் அமைகிறது. கலாச்சார வேறுபாட்டிற்குள்ளும் சிறுபான்மையினருக்கும், பண்பாட்டைப் பாதுகாக்கவும், மத ரீதியான அழுத்தத்திலிருந்து விடுபடவும், அனைவருக்குமான புரிந்துணர்வு முக்கியமானதாகிறது. யுத்தம,; வன்முறைக்கு இணங்காத கருத்தாக்கமாக அமைதி அமைவதும், பகைமையற்ற சூழலின் வெளிப்பாடாகவும் உலகளாவிய சிந்தனையில் போர்களற்ற தன்மையாகவும் காணப்படுகிறது.

காந்தியடிகள் அமைதி குறித்த முக்கியமான உள்ளீட்டைப் பெற்றிருந்தார். சமூகநீதி காணாது போகும் போது அங்கு அமைதி இருப்பதாகக் கருத முடியாது. நீதி என்பது அமைதிக்கு அடிப்படையானது, என காந்தி கருதினார். அமைதி என்பது வன்முறையற்ற தன்மை மட்டுமல்ல நீதியின் இருப்பும் நீங்காதத் தன்மையுடன் ஒளிர வேண்டும் என்பது இதனால் புலனாகிறது.

போரும் அமைதியும்:

உலகின் அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். உலகில் நடைபெற்ற இரு பெரும்யுத்தங்கள் பழி வாங்குதலின் சாட்சியாய் இன்னும் கனன்று எரியும் நெருப்பைத் தன்னகத்தே வைத்து உறங்குகிறது.

உலக வரலாற்றில் நடைபெற்ற போர்களில், இரண்டாவது உலகப்போர்  முக்கியமானது. காரணம,; உலகமே இரு அணிகளாக பிரிந்து, உலகின் பல பகுதிகளில் தங்களுக்குள் சண்டையிட்டன. கணக்கிட இயலாத உயிர்ச்சேதம் ஏற்பட்ட இப்போரினால், காணாமல் போனவர்களும,; அகதிகளானவர்களும், நோய்க்கு உள்ளானவர்னளும் மிக அதிகமாய் இருந்தார்கள். உலகிலேயே மனிதகுலம் இதுவரை சந்தித்த மீப்பெரும் அழிவுக்கு இரண்டாம் உலகப்போர் காரணமாகியது.

    ஆக்கத்திற்குப் பயன்படவேண்டிய தொழில்துறை, பொருளாதாரம,; அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அழிவுக்குப்பயன்படுத்தி, உலக அமைதியை சுருக்கிட்டு மேலேற்றிய செயல்கள் நடைபெற்றது வரலாற்றின் பக்கங்களில் குருதி வழிய எழுதப்பட்டிருக்கிறது.

    இரண்டு பிராந்தியங்களுக்கு இடையிலான வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ள இயலாத மனப்பக்குவமற்ற தன்மையே பெரும் போரினை வரவழைத்திருக்கிறது என்பது வலிக்கும் உண்மை, பிறரின் சமாதான இருப்பைக்குலைக்கும் சிந்தை, தான், தோல்வியினைச் சந்திக்கும் போதும், நிராகரிக்கப்படும் போதும் ஏற்படுகிறது என்பது போர்கள் நமக்குக் காட்டும் வெளிச்சம்.

தீர்வும் தேவையும்:

    இரண்டாம் உலகப்போரின் பின்பு உலக அமைதி வேண்டி 1945 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நாடுகளிடையே ஏற்படும் பிரச்சனைகள், போர்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறது என்றாலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமைதிக் குலைவு ஏற்படுத்தும் துப்பாக்கிகளுக்கும் தீவிரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

    அடிப்படை சுதந்திரத்தையும், நாடுகளுக்கு இடையேயான நல் உறவினை மேம்படுத்தவும், பாதுகாக்கவும்,மக்களாட்சியின் வழியே சமாதானத்தை மேம்படுத்துவது ஒன்றையொன்று வலுப்படுத்தும்.

    நமது மனதின் அடியாழத்தில் உள்ள அன்பை வெளிப்படுத்துவதோடு மனித சமத்துவத்தையும், தன்மானத்தையும் கொணர்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் அமைதிக்கான உரிமை உள்ளது.  உலகத்தைக் கிழித்துக் கொண்டிருக்கும் வன்முறைக்கான தீர்வின் தேடலே அமைதி தினம்.

    சமாதானத்தைத்தக்க வைத்தல் அரிதான தொரு சூழலில், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் நடைபெறும் வன்முறை மக்கள் மீதான அடிப்படை வாதத்தை நிரூபணம் ஆக்கிய வண்ணம் உள்ளது.  போர் நடைபெறும் நாடுகளின் மீதான வன்முறை, மனிதநேயம் மற்றும் சமயம் சார்ந்த மதிப்பீடுகளைத் தூக்கி எறிகிறது.

    அமைதியைத்தக்க வைக்க வேண்டுமானால், கல்வி நிலையங்களின் வழியாக ஊடுருவும் கசப்பின் விதைகளை அகற்றினால் மட்டுமே சாத்தியமாகும். வளரும் இளம் சமுதாயத்தின் கண்களுக்கு மறைவாயுள்ள ஒளியை வெளிக்கொணர்தல் அவசியம். மனிதனது மனதின் அடுக்குகளுக்குள் ஒளிந்திருக்கும் வன்மத்திற்கு எதிரான தடுப்பினை அமைதி கொண்டே கட்டமைக்க வேண்டியது காலத்தின் தேவையாய் உள்ளது

    நவீன போர் முறைகளின் வளர்ச்சிக்கு எதிராக அமைதியைக் கொண்டு செல்வதும். அதன் மூலம் மனித குலத்தினை அழிவிலிருந்து மீட்டெடுக்கவும் ஏற்ற உபாயம் அமைதியின்றி வேறாக இருக்க இயலாது.

    மனித உரிமையும் மக்களாட்சியின் மீதான மதிப்பும் ஏற்பட அமைதியை நோக்கிய நமது கல்விப் பயணம் முன்வைக்கும் கருத்து இதுவே.  இளம் வயதில் வெறுப்பினை வளர்க்கும் சாதி, மதம் சார்ந்த விழுமியங்களை அகற்ற சிறப்பான சம வாய்ப்புள்ள கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

    இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் அதி முன்னேற்றம் அடைந்துள்ளோம். எனினும் போரினால் பலியாகும் எண்ணற்ற உயிர்களின் வாழ்வைக் காப்பதற்கான வழிகளைத் திறக்கும் திறவுகோல் எதுவாக இருக்கிறது.

    உலகெங்கும் போரின் துயரங்கள் படிந்திருக்கும் வீடுகள், உடல் உறுப்புகளை இழந்தோர். உறவுகளை இழந்தோர் என இழப்பின் பரிபூரண வேதனை தரும் தீவிரவாதத்தின் நீட்சிக்கு முடிவு எதுவாக இருக்க முடியும்.

அய்லானும் அமைதியும்:

    சிரியா நாட்டில் இருந்து கிரேக்க நாட்டிற்கு அகதியாகச் சென்ற சிறுவன் அய்லான், கடலில் மூழ்கி பலியாகி கடற்கரையில் உயிரற்று ஒரு பொம்மையைப் போலக்கிடந்தான்.

    லிபியா,சிரியா உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டுப் போர் காரணமாக வெளியேறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒரு அமைதியான வாழ்வைத் தேடி வேறு நாடுகளுக்கு அகதியாகப் பயணமாகின்றனர்.

    மத்திய தரைக் கடல் நாட்டிலிருந்து ஐரோப்பிய நாட்டிற்கு, உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பயணம் மேற்கொண்ட அய்லானின் குடும்பத்திற்கு இனி அமைதியின் விளக்கு ஒருபோதும் எரியப்போவதில்லை.

மன அமைதியின் கலங்கரை விளக்கம்:

    போர் உண்டாக்கும் சிக்கல்கள் தவிரவும், சக மனிதர்களோடு மன ஒருமையுடன் வாழ அடிப்படையான புரிந்துணர்வும், சகித்தலும் தேவையாகிறது. மன அமைதிக்குத்தடை உண்டாகும் தருணங்களில், உறவு, தொழில் போன்றவற்றில் பொருத்தப்பாடற்ற சூழல் ஏற்படுகிறது.  அமைதியான வாழ்வென்பது தனக்கும், தன்னை சார்ந்தோருக்கும் விலை மதிக்க இயலாத காலத்தைப் பரிசளிக்கும் என்பதே, உலக அமைதி தினத்தின் கலங்கரை விளக்கிலிருந்து கசியும் ஒளி.





                                   அ. ரோஸ்லின், ஆசிரியை,

                                   அரசு மேல்நிலைப்பள்ளி,

                                   தா. வாடிப்பட்டி.

No comments:

Post a Comment