Sunday 1 November 2015

அகநாழிகை பதிப்பகத்திற்கு என் நன்றியை ....

மெல்லிய அதிர்வுகளுடன் கூடிய மன ஓரங்களில் ஒலிக்கும் பறவைக் கூட்டமெனச் சொற்கள் பறக்கும் வித்தை கண்டு, பிரம்மிப்புடனேயே களிப்புற்றுக் கடக்கிறேன்.

    எங்கனம் என் சொல்லின் வேர்களை நிலத்தில் பதிய வைத்தேன்,அதன் ஈரம் மிகு மலர்களையோ,பசிய தளிரையோ காண்கையில் தோன்றும் ஏக்கமும், நிச்சயமுமற்ற என் வெளி, எனக்கான ஒரு சுடரைக் காண்கையில்,நெடிய கதவுகள் பூட்டிய புள்ளியிலிருந்து சுதந்திர விருப்பின் வழியாகப் பரவுகிறது.
      எப்போதும் அன்பு காட்டப்படாத அல்லது அன்பை வேண்டாத தருணங்களாகப் பொழுதுகள் கழிகையில், எங்கிருந்தோ எனை, எனக்கே அடையாளப்படுத்தும் காத்திரமான பிரியத்தை,எவரும் என்னிடம் பகிர்ந்திடாத அதன் பிரதியை எழுதியிருக்கிறேன்..இன்று நான் அதன் புறத்தே நின்று தன்னிலையின் துன்பம் மற்றும் வலியிலிருந்து, அவ்வார்த்தைகளை என் கரங்களில் எடுத்துப்பார்த்துப் பரிதபிக்கிறேன், என்னில் ஒட்டவே ஒட்டாத அச்சிநேகத்தை..
              முதல் தொகுப்பு வெளிவந்த காலத்தில்,அடுத்தொரு கவிதைத் தொகுப்பு எழுதுவேன் என்று ஒரு போதும் எண்ணியதில்லை.வலுவந்தமாக வார்த்தைகளை உற்பவித்து முன்னிறுத்தும் தன்மையும் ஏற்றதில்லை.
      எனக்கான சிலிர்ப்புடன் பரவி இருக்கும் பிரதிமையினை, எனது நுண் தன்மைக்கு  ஒத்த மகிழ்வின் திருப்தியை,சிறிது பிணைப்புடன் கட்டமைக்க முயல்கிறேன்.
       எனது தொன்மம் குறித்தும் பெண் கடவுட்களின் இருண்மை தாங்கிய அகம் குறித்தும்,அதன் போலியான திரைகளை விலக்கும் அதிகாரமற்று ஓரு சாமான்யப்பட்ட பரிச்சயத்தை பிரதிநிதிப்படுத்த முயற்சிக்கிறேன்.  எனது தனிப்பட்ட எதிர்பார்ப்புகள்,என் சீவியத்தில் நன் முழுக்கச் சார்ந்திருக்கும் பரப்பினைச் சுட்டுகிறது.இப்படிப்பட்ட சார்தலுடன் ஒரு படகினைப் போல என் சொற்களைப் பின் தொடர்கிறேன்.மாபெரும் பேரிரைச்சல் நிரம்பிய ஸ்தலத்தில், கொட்டிக்கிடக்கும் அடர் பச்சைப் பிரியத்தினுள் என்னை நானே மீட்டெடுக்கவும் ,  மூழ்கிப்போகவும் இயலுகிறது..அப்படி வாய்த்த கணங்களை அதே பிரியத்தின் குப்பியிலிட்டுப் பதிவு செய்திருக்கிறேன்.
       ஸ்நேகம் எப்படியொரு பரவசத்தைத் தெளிக்குமோ,அப்படியே பிரிவையும் எதிர் கொள்கிறேன்.பிரிவை எழுதும் மனோ நிலையினை அதன் சீவாதாரமான மீள் சென்மத்தை அதன் வேர்களில் பத்திரப்படுத்துகிறேன்..
   பல்வேறு சூழல்களில் என் எழுத்தை உற்சாகப்படுத்தி வரும் சமயவேல் சார்,ந.சயபாஸ்கரன் சார்,செந்தி,  நேச மித்ரன், ஆகியோருக்கும்,,இத்தொகுப்பைச் சிறப்புடன் வெளியிடும் அகநாழிகை பதிப்பகத்திற்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்

No comments:

Post a Comment